காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக கூறிய மத்திய அரசு அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
காவிரி நீர்ப் பங்கீடு வழக்கில் கர்நாடகா மற்றும் கேரள அரசுகளின் வாதம் முடிந்த நிலையில் தமிழக அரசின் இறுதிவாதம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், காவிரி நீர் இல்லையெனில் மாநிலத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், காவிரி விவகாரத்தில் நீதிமன்றமும் மத்திய அரசும் தங்களின் கோரிக்கைகளை கேட்கவில்லை என்றும் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தமிழக அரசு புதிய அணைகளை ஏன் கட்டக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், அணைகள் கட்டும் அளவுக்கு புவியியல் அமைப்பு இல்லை என கூறினார்.