தமிழகத்திற்கு 5 நாட்கள் நீர் திறக்க வேண்டும் - கர்நாடகாவிற்கு உத்தரவு
பெங்களூருவில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 12வது கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் நீர்வளத் துறை செயலாளர் பிரபாகர், கர்நாடகா சார்பில் ஜெயபிரகாஷ் மற்றும் கேரளா, புதுச்சேரி சார்பில் நீர்வளத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த மாதம் 25ம் தேதி எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தமிழக, கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர் எவ்வளவு வந்தடைந்தது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு அடுத்த 5 நாட்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், கர்நாடக அணைகளுக்கு வரும் நீர் அளவை பொறுத்து, விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப் பட வேண்டும் என்றும் காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவர் நவீன்குமார் உத்தரவிட்டார். அடுத்தக் கூட்டம் வரும் 8ம் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

