பெண்களுக்கு எதிராக காங். வேட்பாளர் பிரச்சார வீடியோ - கேரளாவில் வெடித்தது சர்ச்சை
பெண்களுக்கு எதிராக வீடியோ வெளியிட்டதற்காக கண்ணூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாகரனுக்கு எதிராக கேரள பெண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூரை சேர்ந்தவர் சுதாகரன். இவர் கடந்த ஜனவரி மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்றபோது ஆண் மகனை போன்று செயல்படுவார் என நினைத்தேன். ஆனால் அவர் பெண்ணை விட மோசமான நிர்வாகத்தை அளிக்கிறார் என சர்ச்சையாக பேசினார்.
இதற்கு பெண்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வந்ததையடுத்து மன்னிப்பு கோரினார். இதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்கு வந்தால் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என சர்ச்சையை கிளப்பினார் சுதாகரன்.
இதுபோன்று பெண்களை பற்றி பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது இவருக்கு வாடிக்கைதான். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பெண்களுக்கு எதிரான பரப்புரை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆண் சென்றால்தான் ஒரு விஷயத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வர முடியும் என்ற தொனியில் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் அந்த குறும்பட விளம்பர வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் ஆண் வேட்பாளரை வெற்றிபெறவைத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்ற விதமாக அவ்விளம்பரம் அமைந்துள்ளது.
இதனிடையே சிபிஎம் வேட்பாளர் பி.கே ஸ்ரீமதி ஆசிரியையை குறிவைத்தே இது அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் பெண்களை மட்டுப்படுத்தும் நோக்கில் இருப்பதால் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. பி.கே ஸ்ரீமதி ஒரு ஆசிரியை கடந்த தேர்தலில் சுதாகரனை 6,500 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்நிலையில், இதுபோன்ற வீடியோவை சுதாகரன் வெளியிட்டிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பெண்கள் பலரும் அவரின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பெண்களுக்கு எதிராக வீடியோ வெளியிட்டதற்காக கண்ணூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாகரனுக்கு எதிராக கேரள பெண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. பலர் காங். தலைவர் ராகுல் காந்திக்கு இதனை டேக் செய்து கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.