முன்கூட்டியே சட்டப்பேரவை கலைவதை தடுக்க தேர்தல் ஆணையம் செக்..!

முன்கூட்டியே சட்டப்பேரவை கலைவதை தடுக்க தேர்தல் ஆணையம் செக்..!
முன்கூட்டியே சட்டப்பேரவை கலைவதை தடுக்க தேர்தல் ஆணையம் செக்..!
Published on

சட்டமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னதாக மாநில அரசு கலைத்தால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது.

பொதுவாக சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். சட்டப்பேரவையில் மெஜாரிட்டி இருக்கும்பட்சத்தில் அந்த அரசால் 5 ஆண்டுகள் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். ஆனால் மக்களவை தேர்தலோடு பல மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக சில மாநில சட்டப்பேரவைகளின் ஆயுட் காலத்தை உரிய காலத்திற்கு முன்னதாகவே கலைத்துவிட்டு மக்களவை தேர்தலோடு தேர்தலை சந்திக்கவும் பாஜக முயற்சிக்கிறது. இதேபோன்று சமீபத்தில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா அரசசையும் கலைக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் அதனை ஆளுநரும் ஏற்றார். இதனையடுத்து தெலங்கானா அரசு கலைந்தது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. இருந்தாலும், இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து தெலங்கானா மாநிலத் தேர்தலையும் நடத்த சந்திரசேகர் ராவ் திட்டமிட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்நிலையில் சட்டமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னதாக மாநில அரசு கலைத்தால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. பொதுவாகவே ஒரு மாநிலத்திற்கு எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறதோ அன்று முதல் தான் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வரும். அதன்பின் மாநில அரசாங்கம் மக்களுக்கு எந்தவித புது அறிவிப்பையோ, திட்டங்களையோ செயல்படுத்த அனுமதி இல்லை.

ஆனால் மாநில அரசாங்கம் உரிய காலத்திற்கு முன்னதாக சட்டப்பேரவையை கலைத்துவிடும் பட்சத்தில் அதன்பின் அடுத்து வரும் தேர்தலில் மக்களின் வாக்குகளை அள்ள பல சலுகை அறிவிப்பை வெளியிடலாம் என தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனை தடுக்க சட்டமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னதாக மாநில அரசு கலைத்தால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளை அமலுக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருகிறது. இதன்மூலம் அரசியல் கட்சிகளால் எந்தவித சலுகை அறிவிப்பையும் சட்டப்பேரவை கலைக்கப்பட்ட பின் வெளியிட முடியாது. மேலும் அரசாங்கம் முன்கூட்டியே சட்டப்பேரவையை கலைக்கும் திட்டத்தை கைவிடும் என்றும் தேர்தல் ஆணையம் கருதுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com