கொரோனா முன்னெச்சரிக்கை : மாருதி, ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் மூடல்

கொரோனா முன்னெச்சரிக்கை : மாருதி, ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் மூடல்
கொரோனா முன்னெச்சரிக்கை : மாருதி, ஹோண்டா உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் மூடல்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாருதி, ஹோண்டா, ஹூண்டாய் மற்றும் மகேந்திரா நிறுவனங்கள் தங்களது ஆலைகளை மூடியுள்ளன.

கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் 192 நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3, 36, 075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14,613 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 97, 636 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாருதி, ஹோண்டா, ஹூண்டாய் மற்றும் மகேந்திரா நிறுவனங்கள் தங்களது ஆலைகளை மூடியுள்ளன.

குருகிராம் மற்றும் மானேசர் பகுதிகளில் இயங்கி வரும் ஆலைகளை உடனடியாக மூடுவதாக இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி கூறியுள்ளது. இந்த ஆலைகளில் மறு அறிவிப்பு வரும் வரை உற்பத்தி நடைபெறாது என தெரிவித்துள்ள மாருதி நிறுவனம், ரோத்தக்கில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தையும் மூடுவதாக அறிவித்துள்ளது.

இதேபோல, நொய்டா மற்றும் ராஜஸ்தான் மாநிலம் தபுகாராவில் உள்ள ஆலைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூடுவதாக ஹோண்டா நிறுவனம் கூறியுள்ளது. மகேந்திரா அண்ட் மகேந்திர நிறுவனத்தின் 3 ஆலைகளும், பியட் நிறுவனத்தின் ஆலையும் மூடப்பட்டுள்ளன.

சென்னை அருகே இயங்கி வரும் ஹூண்டாய் ஆலையும், மறு அறிவிப்பு வரும் வரை உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வரும் ஹீரோ, சுசுகி, ஹோண்டா, ராயல் என்பீல்டு, டிவிஸ் நிறுவனங்களும் தங்களது ஆலைகளை மூடியுள்ளன. டிவிஸ் நிறுவனம் இன்றும் நாளையும் தனது ஆலைகளை மூடியுள்ளது. ராயல் என்பீல்டு மற்றும் சுசுகி நிறுவனங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை தங்களது ஆலைகள் இயங்காது என அறிவித்துள்ளன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com