இந்தியாவுக்கே விடிவு காலம்.. உயிர்காக்கும் மருந்துகளின் விலை 90 சதவீதம் குறைவு!
செய்தியாளர் - கார்த்திகேயன்
பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகுவது உடலின் ஒரு பொதுவான செயல்பாடு. ஆனால், சேதமடைந்த அந்த பழைய செல்கள் அழியாமல் பெருகிக்கொண்டே சென்றால், அது கட்டியாக மாறி, பின்னர் புற்றுநோயை உருவாக்குகின்றன. மார்பக புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு வகைகளில் கேன்சர் நோய் மக்களைப் பாதிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் அளவில் எந்த அளவுக்கு பாதிப்பை அனுபவிக்கிறார்களோ, அதே அளவுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், இந்த நோய்கான மருந்துகளை வாங்க வேண்டும் என்றால், அது குறைந்தபட்சம் 700 ரூபாயில் இருந்து அதிகபட்சம் 26 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை அனைத்தும், அந்த மருந்துகளின் உற்பத்திச் செலவைவிட 10 மடங்கு அதிகமாக இருப்பதை அறிந்த பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பிறகு, இது உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து, நீதிபதிகள் கூடுதல் கவனத்தைச் செலுத்தினர். “வணிகத்தைப் பற்றி பேசாதீர்கள், நோயாளிகளின் உயிரைப் பற்றி யோசியுங்கள். இந்த முறையற்ற விலை வித்தியாசத்திற்கு எங்கு லாபம் செல்கிறது? ஒட்டுமொத்த மருத்துவ அமைப்பும் மருந்து நிறுவனங்களுக்கு உதவுவதற்கு இயங்குகிறதா” என்று சரமாரி கேள்விகளை, உச்சநீதிமன்றம் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், உயிர்காக்கும் மருந்துகளின் புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம், 543 புற்றுநோய் மருந்து பிராண்டுகளின் அதிகபட்ச சில்லறை விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட மருந்துகளின் விலை 73 ரூபாய்க்கும், 26 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட மருந்துகளின் விலை 5 ஆயிரத்து 500 ரூபாய் வரையும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விலைகள் நவம்பர் 9-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் தரவுகளின் அடிப்படையில், இந்த விலை பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றும், இந்த புதிய விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இணையதளங்களிலோ அல்லது மத்திய அரசின் Pharma Sahi Daam செயலி மூலமாகவோ பொதுமக்கள் சரிபார்த்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

