சமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்துக்களை தடுக்க முடியாது: தேர்தல் கமிஷன்
சமூக வலைத்தளத்தில் அரசியல் கருத்து தெரிவித்தால் அதை தடுக்க இயலாது என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சாகர் சூர்யவன்ஷி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பிருந்து தேர்தல் விளம்பரங்கள், அரசியல் கருத்துகள் வெளியிட தடைவிதிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதிகள் நரேஷ் பட்டீல், ஜாம்தார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால், அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு விளம்பரங்களோ, பிரசாரமோ செய்யக்கூடாது என்று ஏற்கனவே விதி இருக்கிறது.
ஆனால் தனிநபர் ஒருவர் தனது வலைப்பதிவிலோ, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்திலோ தனிப்பட்ட முறையில் ஆதரவாக வோ, எதிராகவோ கருத்து தெரிவிக்கும் போது அவர்களை தேர்தல் கமிஷனால் எப்படி தடுக்க முடியும்?’’ என்றார்.
பின்னர் இந்த வழக்கை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.