கச்சத்தீவு விவகாரம் குறித்து இப்போது பேசமுடியாது: சுஷ்மா ஸ்வராஜ்
கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதைப் பற்றி தற்போது பேச முடியாது என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை இன்று கூடியதும் மீனவர்கள் விவகாரம் குறித்து தமிழக எம்.பி.க்கள் மைத்ரேயன், டி.ராஜா, ரங்கராஜன் ஆகியோர் பிரச்னை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை திரும்ப பெறவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவித்தால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது குறையும் என தெரிவித்த அவர், இதற்காக மத்திய அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் கூறினார். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தமிழ் மீனவர்கள் மாறும் வரை கைது நடவடிக்கையை நிறுத்தி வைக்கும்படி இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். அதே சமயம் கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதைப் பற்றி தற்போது பேச முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.