குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்கலாம் என மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை காக்க 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. போக்சோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினால் குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளாகவும், அதிகபட்ச தண்டனை ஆயுள் தண்டணையாகவும் இருந்தது. கூடவே அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
போக்சோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6 ன் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படுவதாக இருந்தது.
மேலும் போக்சோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8 ன் படி குழந்தைகளை பாலியல் சீண்டல்கள் செய்வதற்கு குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படுவதாக இருந்தது.
இந்நிலையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. போக்சோவிலுள்ள 4,5,6,9,14,15,42 சட்டப்பிரிவுகளில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரிவு 4,5,6 ஐ திருத்துவதன் மூலம் குழந்தைகளை வன்கொடுமை செய்தால் மரண தண்டனை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
போக்சோ மூலம் குழந்தைகளை வன்கொடுமை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்மோன்கள் மூலம் குழந்தைகளை பருவமடைய வைத்து வன்கொடுமை செய்தால் தண்டனை எனவும் குழந்தைகளை ஆபாசமாக படமெடுத்து அதைக்காட்டி மிரட்டுபவர்களுக்கு அதிகபட்ச அபராதம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

