அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் இளங்கலை மருத்துவப் படிப்பு வாரியம், முதுகலை மருத்துவப்படிப்பு வாரியம், மருத்துவ தரவரிசை வாரியம் மற்றும் கொள்கை மற்றும் மருத்துவப் பதிவு வாரியம் என 4 சுதந்திரமான அமைப்புகள் செயல்படும் எனவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட குழு இந்த ஆணையத்துக்கு தேவையான அறிவுரைகளை வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்காக நேஷனல் எக்ஸிட் டெஸ்ட் என்ற பெயரில் ஒரே தேர்வு நடத்தப்படும் என்ற அமைச்சர், இந்த தேர்வு எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவ நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றார்.
பதினைந்தாவது நிதி குழுவுக்கான காலவரம்பை நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கவும், அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.