நாடு முழுவதும் 10,000 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியா முழுவதும் ரூ. 57,613 கோடியில் 10 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளை இயக்க வகை செய்யும் பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (நேற்று) ஒப்புதல் அளித்தது.
மின்சாரப் பேருந்து
மின்சாரப் பேருந்துகோப்பு புகைப்படம்

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் நாடு முழுவதும் மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்காக ரூ.20,000 கோடியை வழங்க உள்ளது. டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பொருளாதார விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் விளக்கினர். அதன்படி, இந்தியா முழுவதும் 169 நகரங்களில் அரசு-தனியாா் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ. 57,613 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ. 20 ஆயிரம் கோடி வழங்கப்படும்.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட 3 லட்சம் மற்றும் அதற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மேலும், இந்திய ரயில்வேயில் ரூ. 32,500 கோடியில் மொத்தம் 2,339 கி.மீ. தொலைவுக்கு 7 பன்முக வழித்தட திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப் பிரதேசம், பீகாா், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் என 9 மாநிலங்களில் உள்ள 35 மாவட்டங்கள், இந்தத் திட்டத்தின் கீழ் பலன் அடையும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com