“முதியோரை பராமரிக்கும் பொறுப்பு இனி மருமக்களுக்கும்”- சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல்
முதியோரை பராமரிக்கும் பொறுப்பு அவர்களது குழந்தைகள் மட்டுமல்லாது அவர்களது மருமகள், மருமகனுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் இருக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது இருக்கும் சட்டத்தின்படி முதியவர்களை பராமரிக்கும் கடமை அவர்களது குழந்தைகளுக்கு மட்டுமே உள்ளது.
புதிதாக கொண்டு வரப்படவுள்ள சட்ட திருத்தத்தின்படி முதியோர்களை பராமரிக்கும் பொறுப்பு அவர்களது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது அவர்களது குழந்தைகளை மணந்த மருமக்களுக்கும் இருக்கும். பராமரிப்பு என்பது வீட்டுவசதி, பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது என வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போது முதியோருக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகை அதிகப்பட்சமாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்கிற உச்சவரம்பும் நீக்கப்பட்டுள்ளது.
இனி பராமரிப்பு தொகை முதியோரின் வாழ்க்கைத் தரம், அவர்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களின் வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. பெற்றோரை காக்க தவறுவோருக்கு அதிகபட்சமாக மூன்று மாத சிறை தண்டனை என்பது ஆறு மாத சிறை தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் மற்றும் முதியோரின் கண்ணியத்தை காக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இந்த சட்ட திருத்தம் வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.