பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் நாக்கை கடித்து தப்பித்த பெண்!
பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரின் நாக்கை கடித்து தப்பித்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஜெய்பூரைச் சேர்ந்த 21 வயதான பெண் ஒருவர் தன்னுடைய நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டுவிட்டு நடு இரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் அழைத்த வாடகை காரில் வேறு ஒருவரும் இருந்துள்ளார். கார் புறப்பட தொடங்கியதும் காரில் இருந்த இருவரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். காரில் இருந்தவர் பொம்மை துப்பாக்கியை கையில் காட்டி அப்பெண்ணை மிரட்டியுள்ளார். ஆனால் தைரியமாக செயல்பட்ட அப்பெண், இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு ஒருவரின் நாக்கை கடித்து காரில் இருந்து தப்பித்துள்ளார்.
உடனடியாக அருகில் இருந்த காவல்நிலையம் சென்று புகாரளித்துள்ளார். உடனடியாக ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய செல்போனை காரிலேயே தவறிவிட்டுள்ளார். அவரின் செல்போனுக்கு போலீசார் தொடர்புகொண்டதும் குற்றவாளியான கார் டிரைவர் சுரேஷ் வெர்மா போனை எடுக்க, அவர் இடத்தை அறிந்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
கடிபட்ட நாக்குடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற மற்றொரு குற்றவாளியான சச்சின் சர்மாவையும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரின் மீது பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்புடைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தைரியமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய உதவிய அந்த பெண்ணுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.