இடைத்தேர்தலில் வரிந்துகட்டும் எதிர்க்கட்சிகள் : சமாளிக்குமா பாஜக?
மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலிலும் மீண்டும் வென்று ஆட்சியை அமைப்போம் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் உள்ளனர். இருப்பினும் பாஜகவை தோற்கடித்தே ஆக வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பாஜகவிற்கு எதிரான மாநிலக் கட்சிகளும் உள்ளன. இந்நிலையில் நாட்டின் சில மாநிலங்களில் நாளை நடைபெறவுள்ள இடைத்தேர்தல்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நாளைய தினம் நாகாலாந்த், மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியா மற்றும் பால்கர், உத்தரப்பிரதேசத்தின் கைரானா ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சி மற்றும் அதன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்த நான்கு தொகுதிகளிலும் இதற்கு முன் பாஜக கைவசம் இருந்தவை ஆகும். இதுத்தவிர உத்தரப் பிரதேசத்தில் நுபுர்பூர், பிகாரின் ஜோகிகாட், உத்தராகண்டின் தராலி, மேற்கு வங்கத்தின் மஹேஷ்தலா, கேரளாவின் செங்கனூர், ஜார்கண்டின் சில்லி மற்றும் கோமியா உட்பட 9 மாநிலங்களில் 10 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாளை வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. இந்தத் தொகுதிகளை கைப்பற்றி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக உள்ளது. இருப்பினும் பாஜகவை தோற்கடித்து, நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உள்ளன.
ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் புல்பூர் ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில், அங்கு ஆளும் கட்சியான பாஜக தோல்வியடைந்துள்ளது. அந்த இரண்டு தொகுதிகளும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் கே.பி.மெளர்யா ஆகியோரின் தொகுதிகள் என்பதால், அந்த தோல்வி பாஜகவிற்கு அதிர்ச்சி அளித்தது. அந்த இரண்டு தொகுதிகளில் எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. அத்துடன் அந்த சமயத்தில் பீகார் மாநிலத்தில் உள்ள அராரியா மக்களவைத் தொகுதிக்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலிலும் பாஜக தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியை குறிப்பிட்டு பேசிய எதிர்க்கட்சிகள் இனி பாஜகவிற்கு சரிவு தான் என தெரிவித்தன.
இந்த முறையும் உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடித்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ள காங்கிரஸ், அங்கு நடைபெறும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் தனது வேட்பாளர்களை வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மேலும் மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியா மக்களவை தொகுதியிலும் வேட்பாளாரை நிறுத்தாமல், தேசியவாத காங்கிரஸுக்கு ஆதரவளித்துள்ளது. ஏனெனில் பாஜகவிற்கு எதிரான ஓட்டுக்கள் பிரிந்தால், அந்தக் கட்சி எளிதில் வென்று விட முடியும் என்பதால் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவின் மற்றொரு மக்களவை தொகுதியான பால்காரில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாகாலந்தில் உள்ள மக்களவை தொகுதியிலும் பாஜக - மக்கள் ஜனநாயகக்கட்சியின் கூட்டணி வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நாகா மக்கள் முன்னணி கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். அங்கும் போட்டி சவாலாக உள்ளது. இவ்வாறு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு இந்த முறை பாஜகவிற்கு எதிராக வரிந்துகட்டியுள்ளன. இந்த நெருக்கடியை சமாளிக்க பாஜகவும் அரசியல் திட்டங்களை கையாண்டு வருகின்றன. இதனால் அனைத்து இடங்களிலும் இடைத் தேர்தல் சூடிபிடித்துள்ளது.