காஷ்மீர் இடைத்தேர்தலில் வன்முறை: 6.5% வாக்குகளே பதிவு
காஷ்மீரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. இதில் 6 பேர் பலியாகினர்.
இடைத்தேர்தல் நடைபெற்ற ஸ்ரீ நகர் மக்களவைத் தொகுதியில் மாலை 6 மணிவரை 6 புள்ளி 5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சாந்தனு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி என்ற இளைஞர் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட தொடர் வன்முறை காரணமாக, மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஸ்ரீ நகர் மக்களவைத் தொகுதி எம்பி தாரிக் ஹமீது காரா தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக இருந்த ஸ்ரீ நகர் மக்களவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், வாக்களிக்க வேண்டாம் என பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்ததை அடுத்து, வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றது.
இதனிடையே, 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 6 பேர் பலியாகினர். போராட்டக்குழுவினர் கற்களை வீசித் தாக்கியதில், பாதுகாப்புப் படையினர் பலரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பிரிவினை வாத இயக்கத்தினர் இரண்டு நாட்கள் முழுஅடைப்பு நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.