'இந்திய பொருட்களையே வாங்குங்கள்; வாங்க ஊக்குவியுங்கள்' பிரதமர் மோடி
இந்திய மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன் கி பாத் என்ற பெயரிலான மாதாந்திர வானொலி உரையில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். உள்நாட்டு பொருட்களை வாங்குவதுடன் பிறரையும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதை ஊக்குவிக்கவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். குறைந்த பட்சம் இந்தியா 75வது சுதந்தர தினத்தை கொண்டாடும் 2022ம் ஆண்டு வரையாவது இந்த அறிவுரையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அடுத்த 10 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்துக்கு இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் எனவும் இளைய தலைமுறையினர் மீது இந்தியா பெரும் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு முறையாக பதிலளிக்கவில்லை என்றால் இளைஞர்கள் பொறுத்துக்கொள்வதில்லை என்றும் தைரியமாக கேள்விகளைத் தொடுப்பதாகவும், இது சிறப்பானதென தாம் நினைப்பதாகவும் மோடி பாராட்டியுள்ளார். அடுத்த பத்து ஆண்டுகளில் நவீன இந்தியாவை உருவாக்குவதில் இளைய தலைமுறை மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்பதில் தமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்.