தலைநகர் டெல்லியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த 46 வயதான நபர் நீரஜ் குப்தா. தொழிலதிபரான இவர் கடந்த 14-ம் தேதி முதல் காணவில்லை. குப்தாவின் நண்பர் 14-ம் தேதி வீட்டுக்குச் சென்றபோது அவரை காணவில்லை என்பதால், அவரின் மனைவிக்கு தகவல் கொடுக்க அதன்பிறகு போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.
அந்தப் புகாரில் பைசல் (29) என்ற பெண்ணின் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார் அவரின் மனைவி. 'பைசல், குப்தாவின் கம்பெனியில் பணிபுரியும் பெண். பைசலுக்கு ஏற்கனவே திருமணமாகி தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வருபவர். இதே பைசலுக்கும், குப்தாவுக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவரின் பெயரை புகாரில் சேர்த்து அவரை விசாரித்தால் உண்மை தெரியும்' என்று கூறியிருந்தார் குப்தாவின் மனைவி.
அதன்படி, பைசலை பிடித்த போலீஸ், அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், குப்தாவுடன் உறவு இருப்பதை பைசல் ஒப்புக்கொண்டார். அவர் காணாமல் போனது குறித்து எதுவும் தெரியாது என்றே கூறிவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை கொடுக்க, போலீஸ் தங்களின் வழக்கமான பாணியில் விசாரிக்க உண்மையைக் கக்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள போலீஸ் அதிகாரிகள், "குப்தாவின் கரோல் பாக் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பைசல், தன்னை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொள்ள நீரஜ் குப்தாவை வலியுறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு குப்தா செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில், ஜுபைர் என்ற நபருடன் பைசலுக்கு நிச்சயதார்த்தம் செய்துள்ளனர் அவரின் குடும்பத்தினர். பைசல் இது குறித்து குப்தாவிடம் சொன்னபோது, ஜுபைரை திருமணம் செய்வதைத் தடுத்து வந்துள்ளார். இதற்கிடையே, 13ம் தேதி குப்தா, பைசல் வசிக்கும் டெல்லி ஆதர்ஷ் நகர் இல்லத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு ஜுபைருடன் பைசல் இருந்துள்ளார். இதனைபார்த்த குப்தா, பைசல் உடன் வாக்குவாதம் செய்துள்ளார் . வாக்குவாதம் முற்ற ஜுபைர், குப்தாவின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். பின்னர் கத்தியால் வயிற்றில் குத்தி அவரை கொன்றதுடன் தலையை தனியாக துண்டித்துள்ளார். பின்னர் இருவரும் கொலையை மறைக்க திட்டமிட்டு, குப்தாவின் உடலை துண்டு துண்டாக நறுக்கி, சூட்கேஸில் அடைத்துள்ளனர்.
பின்னர் உடலை ஒரு டாக்சியின் மூலம் ஏற்றி நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு கொண்டுச் சென்றுள்ளார் ஜுபைர். ரயில் கேன்டீனில் பணிபுரியும் இந்த ஜுபைர், கோவா செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸில் சூட்கேஸுடன் ஏறியுள்ளார். பின்னர், கோவா செல்லும் வழியில் பருச் என்ற இடத்தின் அருகே சடலத்தை வீசியுள்ளார்" என்று கூறியுள்ளனர்.