
மகாராஷ்டிராவின் புனேவிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து இன்று அதிகாலை நான்கரை மணியளவில் ராய்கட் மாவட்டத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆரம்ப கட்ட மீட்பு பணிகளை மேற்கொண்டு பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாவட்ட அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்குள்ளான இந்தப் பேருந்தில் மும்பையில் உள்ள கோரேகாவ் மற்றும் விரார் போன்ற மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த இசைக் குழுவினர் பயணம் செய்ததும், அவர்கள் புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி என்கிற இடத்தில் ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மும்பை திரும்பும் போது இந்த விபத்து நடைபெற்றதும் தெரியவந்துள்ளது என மகாராஷ்டிரா மாநில உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவில் தனியார் பேருந்து மும்பை நோக்கி புறப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மலைப்பாங்கான பகுதியில் பயணித்தபோது அதிகாலை நான்கரை மணி அளவில் சாலைக்கு அருகே உள்ள பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது என காயம் அடைந்தோர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் இருந்தவர்களை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.