நமாஸ் செய்ய அரசுப்பேருந்தை நிறுத்திய விவகாரம்: பணிநீக்கம் செய்யப்பட்ட நடத்துனர் விபரீத முடிவு!

“என் கணவர், மனிதாபிமானத்துக்கான விலையை கொடுத்துள்ளார்” - மறைந்த நடத்துனர் மோகித்தின் மனைவி வேதனை
நடத்துனர் மோகித்
நடத்துனர் மோகித்Twitter

முஸ்லீம் பயணிகள் நமாஸ் செய்வதற்காக பேருந்தை சில நிமிடங்கள் இடையிலேயே நிறுத்திய விவகாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒப்பந்த நடத்துனர், மன அழுத்தம் மற்றும் பொருளாதார அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவரின் மனைவி ரிங்கி, “என் கணவர், மனிதாபிமானத்துக்கான விலையை கொடுத்துள்ளார்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் மரணித்த தன் கணவருக்காக நியாயம் கேட்டும் பேசியுள்ளார் .

இறந்த அந்த நடத்துனரின் பெயர், மோகித் யாதவ். இவர் கடந்த சில வருடங்களாக உத்தரப்பிரதேச போக்குவரத்துதுறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிவந்தார். கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் பரேலி - டெல்லி ஜன்ரத் நெடுஞ்சாலையில், பாரிலியில் இருந்து கௌஷம்பி நோக்கி சுமார் 14 பயணிகளோடு சென்றுகொண்டிருந்த பேருந்தில், பயணிகள் இருவர் நமாஸ் செய்வதற்காக, ஓட்டுநர் (ஒப்பந்த ஊழியர்) உதவியுடன் சில நிமிடங்களுக்கு மட்டும் பேருந்தை நிறுத்தியிருக்கிறார் நடத்துனர் மோகித்.

அப்போது பேருந்தில் இருந்த சிலர் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதற்கு மோஹித், “நாங்களும் இந்துக்கள்தான். இங்கு இந்து, முஸ்லிம் என்று எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டு நிமிடங்கள் பேருந்தை நிறுத்துவதால் என்ன நடந்துவிடப்போகிறது” என்று மனிதாபிமானத்துடன் கூறியிருக்கிறார்.

இதனை பேருந்திலிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் விஷமக் கருத்துக்களுடன் பரப்பியிருக்கிறார். இந்நிலையில் ‘அரசுப்பேருந்தை எப்படி நடத்துனரொருவர் நிறுத்தலாம்’ என்று கூறி விமர்சனங்கள் எழுந்தது. இந்த வீடியோ ஜூன் 3-ம் தேதி எடுக்கப்பட்டு வைரலான நிலையில், எவ்வித சரியான விசாரனையும் இல்லாமல் அவரை உடனடியாக (வீடியோ பரவி இரு தினங்களில் என சொல்லப்படுகிறது) பணி நீக்கம் செய்திருக்கிறது உ.பி போக்குவரத்து துறை.

மோகித் யாதவ்
மோகித் யாதவ்

ஒப்பந்த நடத்துனராக இருந்த மோஹித் யாதவ், மாதம் 17,000 சம்பளத்துக்கு பணியாற்றி வந்துள்ளார். சுமார் 8 பேர் கொண்ட இவரின் குடும்பமானது, இவர் ஒருவரின் சம்பளத்தை மட்டுமே நம்பி இருந்திருக்கிறது. நடத்துனர் பணியிலிருந்து நீக்கப்பட்ட பின், பல்வேறு இடங்களில் மோகித் வேலைக்கு முயற்சித்தபோதும், வேலை கிடைக்கவில்லையென சொல்லப்படுகிறது.

வீட்டின் மூத்த பிள்ளையான இவர், குடும்ப சூழ்நிலையை கையாள முடியாமல் மன அழுத்தத்தால் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி தற்கொலை செய்திருக்கிறார். இவரின் மரணம், தற்போது அந்தக் குடும்பத்தை மேலும் உலுக்கியுள்ளது.

இந்நிலையில் சமூகவலைதளம் மூலம் இதுபற்றி பேசியுள்ள அவர் மனைவி ரிங்கி, “என் கணவர் மோகித் அப்பாவி. அவர் அந்த வீடியோவுக்காக தவறுதலாக பணிநீக்கம் செய்யப்பட்டார். என் கணவர் தரப்பு நியாயத்தை அதிகாரிகள் கேட்கவேயில்லை, நேரடியாக ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு பணியிலிருந்து அவரை நீக்கிவிட்டனர். பணிநீக்கம் செய்யப்பட்டதிலிருந்தே அவர் மன அழுத்தத்துடனேயே காணப்பட்டார். வீட்டில் கொஞ்சம் பணமே எங்களிடம் இருந்தது.

அதைவைத்து, எங்களை சார்ந்திருந்த பலரை நாங்கள் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்பட்டோம். இதனால் என் கணவரால் தூங்கக்கூட முடியவில்லை. ரொம்ப பலவீனமாகிவிட்டார்.

மோகித் யாதவ் - அவரின் மனைவி ரிங்கி
மோகித் யாதவ் - அவரின் மனைவி ரிங்கி

உத்தரப்பிரதேசத்தின் போக்குவரத்து துறையை சேர்ந்த அதிகாரிகள், குறிப்பாக மண்டல அதிகாரி தீபக் சவுத்ரி தொடர்ந்து என் கணவருக்கு ஃபோன் செய்து அநாகரீகமாக பேசி தொந்தரவு செய்துவந்தார். அவர்தான் என் கணவர் இறப்புக்கு காரணம். என் கணவர், அவருடைய மனிதாபிமானத்துக்கான விலையை தற்போது கொடுத்துள்ளார்” என்றுள்ளார்.

மோகித்தின் 18 வயதேயான கடைசி தம்பி உள்ளூர் ஊடகங்களில் பேசுகையில், “எங்கள் அண்ணன் ரொம்ப ஜாலியா இருப்பார். ஆனா வேலை போன பிறகு அவர் பேசுவதையே விட்டுவிட்டார். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எங்கள் சகோதரிக்கு இந்த வருடம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் இப்போது எங்கள் அன்ணன் இறந்துவிட்டார்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மோகித்தின் தாய், “என் மகன் தவறே செய்யாமல் தண்டிக்கப்பட்டான். ஏதோ வேலையுள்ளதென கூறி வீட்டிலிருந்து கிளம்பினான்... ஆனால் இறுதியில் அவன் சடலத்தையே பார்த்தேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஓட்டுநர், 50% சம்பளம் குறைக்கப்பட்டு பணியில் நீடிக்கிறார். இருந்தபோதிலும் மோகித்துக்கு மீண்டும் பணி கிடைக்க வாய்ப்பே இல்லையென அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனாலேயே அவர் மேலும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

மோகித் யாதவ்
மோகித் யாதவ்

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மண்டல போக்குவரத்து மேனேஜர் ஸ்ரீவஸ்தாவா கூறுகையில், “மோகித்தின் ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து எங்களுக்கு கடந்த ஜூலை மாதம் கோரிக்கை வந்தது. அது பெண்டிங்கில் இருக்கிறது. இதுபோல 2,500 ஒப்பந்த பணியாளர்களின் கோரிக்கைகள் நிலுவையிலுள்ளன. ஆகவே இந்த குறிப்பிட்ட ஒரு கோரிக்கையை பற்றி நான் அறிந்திருக்கவில்லை” என்றுள்ளார்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com