புதுச்சேரி நகரப் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மூலகுளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது புஸ்ஸி வீதியில் ஆட்டோ வந்தபோது, புதிய பேருந்து நிலையம் நோக்கி எதிரே வந்த பேருந்து, ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த 8 சிறுமிகளுக்கு தலை, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு அலறினர். உடனே அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பேருந்து வேகமாக வந்தது தான் விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. இது குறித்து போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.