அறுவடைக்கு பின் எரிக்கப்படும் வயல்கள் - டெல்லியை அச்சுறுத்திவரும் காற்று மாசு

அறுவடைக்கு பின் எரிக்கப்படும் வயல்கள் - டெல்லியை அச்சுறுத்திவரும் காற்று மாசு

அறுவடைக்கு பின் எரிக்கப்படும் வயல்கள் - டெல்லியை அச்சுறுத்திவரும் காற்று மாசு
Published on

உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தராகண்ட், பீகார், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட அனைத்து வட மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் இப்படி தீ வைக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது.

உலகம் முழுவதும் 15 வயதுக்கு உட்பட்ட 93% குழந்தைகள் அதாவது 1.8 பில்லியன் குழந்தைகள் அசுத்தமான காற்றை தான் சுவாசிக்கிறார்கள் என கூறுகிறது உலக சுகாதார மையத்தின் புள்ளி விவரம். 2016 ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 6 லட்சம் குழந்தைகள் காற்று மாசால் இறந்துள்ளனர். இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது இந்தியா. 

2016 ஆம் ஆண்டில் மட்டும் காற்று மாசால் 1 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர். மேலும் உலகில் அதிக மாசு மிகுந்த 20 நகரங்களின் பட்டியலில் டெல்லி உட்பட 14 இந்திய நகரங்கள் இருக்கின்றன. கான்பூர், பரிதாபாத், குர்கான், டெல்லி, ஜெய்ப்பூர்,வாரணாசி, பட்டியாலா, கயா, ஜோத்பூர், பாட்னா, லக்னோ, ஆக்ரா, முசாபர், ஸ்ரீநகர் ஆகியவை மாசு மிக்க நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

காற்று மாசுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக வயல் எரிப்பு நிகழ்வுகள் குறிப்பிடப்படுகின்றன. வட மாநிலங்களில், நெல், கோதுமை போன்றவை ஏப்ரல் மாதம் நடவு செய்து செப்டம்பர் மாதம் அறுவடை செய்யப்படுகிறது. அறுவடை செய்து முடித்தபின் வயலில் தங்ககூடிய கழிவுகளை தான் விவசாயிகள் அப்படியே எரித்துவிடுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 28 லட்சம் ஹெக்டேருக்கு அரிசியும், 35 லட்சம் ஹெக்டேருக்கு கோதுமையும் விளைவிக்கப்படுகிறது.

உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தராகண்ட், பீகார், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட அனைத்து வட மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் இப்படி தீ வைக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. ஒரு முறை வயலுக்குத் தீ வைத்துவிட்டால் முழுவதுமாக அணைப்பது இயலாத காரியமாகிவிடுகிறது. இவ்வாறு செய்வதால் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 2500 ரூபாய் வரை அபராதமாக விதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள கழிவுகளை அகற்ற 5000 ரூபாய் வரை ஆவதால் விவசாயிகள் அபராதம் குறித்து கவலைப்படுவதில்லை. 

இந்த கழிவுகளை அகற்ற பஞ்சாப் உள்ளிட்ட அரசுகள் மானியவிலையில் இயந்திரங்களை கொடுத்தாலும், லட்சகணக்கில் செலவாகும் இவற்றை வாங்க விவசாயிகள் முன்வருவதில்லை. இந்த விவசாய கழிவுகளை அகற்ற பல வழிகள் இருந்தும் இந்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்த பெரும் தடையாக உள்ள நிதிபிரச்சனையை தீர்க்க கடந்த ஆண்டு கையொப்பமான பாரிஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தம் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

இதுகுறித்து பண்ணை விவசாயி ராஜ் பீர் சிங் கூறுகையில், “உத்தரபிரதேசம், ஹரியானா என எல்லா மாநிலத்திலும் விவசாயிகள் தற்கொலை என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அரசுகள் இதனை கண்டு கொள்வதில்லை. களத்திற்கு வந்து என்ன தேவை என்பதை விசாரிப்பதில்லை. மழை இன்மை, வறட்சி என விவசாயிகள் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதால், எங்களுக்கு இது தான் ஒரே வழி.

அரசுகள் அவற்றை தடுக்காமல் ஏன் எங்களை தொந்தரவு செய்கிறார்கள்? லூதியானா, அமிர்தசரஸ் போன்ற நகரங்களுக்கு அதிகாரிகள் போகவேண்டியது தானே? அரசு எங்களுக்கு கொடுக்கக் கூடிய மானியங்கள், சலுகைகளையும் அரசு அதிகாரிகளே எடுத்துக்கொள்கிறார்கள். எங்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை. அரசுக்கு இது எது பற்றியும் கவலை இல்லை. காகிதத்தில் உள்ள சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என நினைக்கிறார்கள். இங்கு வந்து பார்த்தால் தான் எங்கள் கஷ்டங்கள் தெரியும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com