மெக்டொனால்ட்ஸை தொடர்ந்து தக்காளிக்கு விடுமுறை அளித்த பர்கர் கிங்! ஏன் தெரியுமா?
இந்தியாவில் மெக்டொனால்ட்ஸ், சப்-வே, பர்கர் கிங் கடைகளில் கிடைக்கும் பர்கர்களுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. பார்ப்பதற்கு கையடக்க அளவில் இருந்தாலும் அதன் ஒவ்வொரு அடுக்கிலும் வைக்கப்படும் பொருட்கள் பர்கரின் சுவையை மெருகேற்றும்.

இந்த நிலையில் பர்கர் பிரியர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை பர்கர் கிங் நிறுவனம் கொடுத்துள்ளது. சில காலத்திற்கு தங்களது தயாரிப்புகளில் தக்காளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்படுவதன் எதிரொலியாக பர்கர் கிங் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. பர்கர் கிங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தரம் மற்றும் விநியோக சிரமங்களுக்காக பர்கரில் இருந்து தக்காளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் எப்போதுமே உயர்தரமான தயாரிப்புகளை விநியோகம் செய்வதன் மட்டுமே தங்களின் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் TOMATOES WILL BE BACK SOON எனவும் அதுவரை வாடிக்கையாளர்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் பர்கர் கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடைகளின் முன்பாக, சில தருணங்களில் தக்காளிக்கும் விடுப்பு தேவை என நகைச்சுவையாக நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் வெள்ளப் பாதிப்பு மற்றும் விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்ட தக்காளி தற்போது 88 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்திய அரசு நேபாளத்தில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.