\
bullet train
bullet trainpt web

புல்லட் ரயில் திட்டங்களில் புறக்கணிக்கப்படுகிறதா தமிழகம்?

புல்லட் ரயில் திட்டங்களில் புறக்கணிக்கப்படுகிறதா தமிழகம்? சென்னையை மையப்படுத்தும் வழித்தடங்களால் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு என்ன பயன்?
Published on: 

இந்தியாவின் அதிவேக ரயில் கனவு விரிவடைந்துவரும் நிலையில், அதில் தமிழகத்துக்கான இடம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. 2026-27 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய புல்லட் ரயில் வழித்தடங்களில், சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதே தவிர, தென் மாவட்டங்களும் கொங்கு மண்டலமும் புறக்கணிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தொழில் வளர்ச்சி, பொருளாதாரம், பயணிகள் நலன் எனப் பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொண்டு, தமிழகத்திற்குள் கூடுதல் வழித்தடங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

bullet train
bullet trainpt web

மும்பை – அகமதாபாத் திட்டத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் வழித்தடங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த வழித்தடங்களில் பெரும்பாலான பயண தூரம் அண்டை மாநிலங்களிலேயே அமைகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு நேரடி இணைப்பு இல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், பண்டிகைக் காலங்களில் தென் மாவட்ட நகரங்களிலிருந்து சென்னை, பெங்களூரு செல்லும் விமானக் கட்டணம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை உயர்கிறது. இதனால் நடுத்தர மக்கள் விமானப் பயணத்தைத் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக புல்லட் ரயில் திட்டம் அமைய வேண்டும் என, பலதரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

bullet train
bullet trainpt web

அதன்படி, திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற தொழில் நகரங்களையும் புல்லட் ரயில் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும், சென்னை - கோவை இடையே புல்லட் ரயில் இயக்க வேண்டும் எனவும் தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநிலங்களுக்கு இடையேயான புல்லட் ரயில்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல், கோவை போன்ற தொழில் நகரங்களுக்கும் புல்லட் ரயில் திட்டங்கள் வர வேண்டும் என, கோவை தொழில் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா, பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, சென்னை – கன்னியாகுமரி இடையே புல்லட் ரயில் சேவை கொண்டுவர வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சென்னை – கோவை வழித்தடத்தை எர்ணாகுளம் வரையும், தென் மாவட்டங்களில் தூத்துக்குடி துறைமுகம் வரையும் நீட்டித்தால்தான் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்கிறார் பொதுப் போக்குவரத்து நிபுணர் வளவன் அமுதன். புல்லட் ரயில் திட்டத்தை சென்னையோடு நிறுத்தாமல், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி வரை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

தமிழகம் முழுவதையும் இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்போது, ஏற்கெனவே உள்ள தொழில் நிறுவனங்களோடு, புதிய மென்பொருள் உள்பட பல்வேறு தொழில்திட்டங்கள் தென்மாவட்டங்களில் உருவாகவும் வழிவகுக்கும். தமிழகத்தின் வளர்ச்சியை தலைநகரோடு மட்டும் சுருக்காமல், மாநிலம் முழுவதும் சமமாகப் பகிர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.