மண்டையில் பாய்ந்தது புல்லட் என்பது தெரியாமல் டாக்டர்கள் தடுமாறிய சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
மேற்கு டெல்லி பகுதியில் உள்ள சந்திர விகார் பகுதியை சேர்ந்தவர் சுராஜ் பிரகாஷ் ஷர்மா. இவரது சகோதரர் நீரஜ். இருவரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டுக்கு வெளியே வந்தனர். அங்குள்ள மரத்தின் அருகே சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த போது, திடீரென்று சுராஜ் கீழே விழுந்தார். அவர் பின் மண்டையில் ரத்தம் வரத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நீரஜ், அவரைத் தூக்கிக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றார். நள்ளிரவு என்பதால் டூட்டி டாக்டர், ஏதாவது கல் விழுந்திருக்கும் என நினைத்து ரத்தத்தைத் துடைத்து கட்டுப் போட்டுவிட்டு, காலையில் வரச் சொல்லிவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் சுராஜுக்கு கடும் தலை வலி. தூங்க முடியவில்லை. காலையில் அந்த டாக்டர் சொன்னவாறு அதே மருத்துவமனைக்குச் சென்றனர். எக்ஸ்ரே எடுத்து பார்த்த டாக்டர்கள், பின்பக்க மண்டையில் ஏதோ இருப்பதாக நினைத்தனர். ஆனால், அது என்னவென்பது அவர்களுக்குத் தெரியவில்லை. நான்கைந்து டாக்டர்கள் கூடி பேசியும் அவர்களுக்கு இது என்னவென்பது தெரியவில்லை.
இதையடுத்து அவர்களை வேறு மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அது புல்லட் என்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் நான்கு மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை நீக்கினர். சுராஜை சுட்டது யார்? அல்லது நள்ளிரவில் அவர் மண்டைக்கு கீழே குண்டு பாய்ந்தது எப்படி? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.