பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் விலை உயரும் பொருட்கள் என்னென்ன?
இறக்குமதி வரி அதிகரிப்பால் மின்விசிறி, கிரைண்டர், குக்கர், காலணி உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரிக்க உள்ளன.
நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் சீதாராமன், பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் பல்வேறு பொருட்களின் விலை அதிகரிக்க உள்ளது. நெய், வெண்ணெய், சமையல் எண்ணெய், சோளம், பதப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சுவிங்கம், சோயா, வால்நட் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர உள்ளன.
இது தவிர காலணிகள், சவரம் செய்யும் பொருட்கள், சீப்பு, சமையலறைப் பொருட்கள், நீர் வடிகட்டி கருவிகள் ஆகியவற்றின் விலையும் அதிகரிக்க உள்ளது. மாணிக்கம், மரகதம், நீலமணிக்கற்கள் மற்றும் ரத்தினங்களின் விலை கூடுகிறது. வாட்டர் ஹீட்டர், மின்விசிறி, கிரைண்டர், குக்கர், டோஸ்டர், விளக்குகள், காபி மற்றும் தேநீர் தயாரிக்க பயன்படும் இயந்திரங்களின் விலைகள் அதிகரிக்கின்றன.
பொம்மைகள், ஸ்டேஷனரி பொருட்கள், செயற்கை பூக்கள், செல்போன்களுக்கான டிஸ்ப்ளே பேனல்கள், சிகரெட்டுகள் உள்ளிட்டவைகளின் விலைகளும் உயர்கின்றன. செய்தித்தாள்கள் அச்சிடுவதற்கான செலவு, விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்கள், மைக்ரோஃபோன், எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் குறைகின்றன.