செலவில்லா விவசாயம் ஊக்குவிக்கப்படும் : நிதி அமைச்சர் நிர்மலா அறிவிப்பு
மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செலவில்லா விவசாயம் ஊக்குவிக்கப்படும் எனவும் உணவுத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
2019 - 20ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் வேளாண் துறைக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் புதிதாக பத்தாயிரம் விவசாய உற்பத்தி அமைப்புகள் உருவாக்கப்படும் என்றும் விவசாயிகளே இந்த நாட்டுக்கு உணவளிப்பவர்கள் என்றும், உணவுத்துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றிருப்பதற்கு காரணம் இந்திய விவசாயிகளே என்றும் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
செலவில்லா விவசாயம் என்ற பெயரில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் எனவும் வேளாண் உட்கட்டமைப்பில் பரவலாக முதலீடு செய்யப்படும் என்றும், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும் அது தொடர்பான தொழில்களுக்கும் விவசாயப் பொருட்கள் மதிப்பு கூட்டும் தொழில்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் துறையில், தனியார் பங்களிப்பு தேவைப்படுவதாக கூறிய நிர்மலா சீதாராமன், பெருமளவிலான விவசாயிகள், பொருளாதார மதிப்புச் சங்கிலியில் இணைவார்கள் என்றார். விவசாய ஆன்லைன் சந்தையின் மூலம் மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்தெரிவித்துள்ளார்.