எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன்: மாயாவதி ஆவேசம்
தலித் மக்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்வேன் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆவேசமாக கூறினார். இதனால் மாநிலங்களவையில் பரபரப்பு ஏற்பட்டது.
மாநிலங்களவை இன்று கூடியதும், உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து மாயாவதி கேள்வி எழுப்பினார். அவர் பேசுவதற்கு 3 நிமிடங்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த மாயாவதி ஆவேசமாகப் பேசினார். இதனால் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
வெளிநடப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலங்களவையில் எனது குரலை எழுப்ப முடியவில்லை. தலித் மற்றும் பழங்குடியினர் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகத்தான் நாடாளுமன்றத்துக்கு வருகிறேன். ஆனால் இங்கு அவர்களின் பிரச்னையை என்னால் பேச முடியவில்லை. அவ்வாறு இருக்கும்போது எதற்காக நான் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். எனவே, எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளேன் என அவர் கூறினார்.