நெருங்கும் தீபாவளி பண்டிகை: சம்பளம் வராமல் தவிக்கும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் !
அரசு ஊழியர்களுக்கு மாதம் 1ம் தேதி ஆனால் சம்பளம் டான்னு வந்துடும் என்று கூறும் காலம் போய். இந்த மாதம் சம்பளம் கொடுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டது மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவனம்.
இந்தியாவிலேயே தொலைத் தொடர்பு நிறுவனங்களில் அதிக சொத்துக்கள் கொண்ட அதாவது சுமார் ரூ 4லட்சம் கோடி மதிப்புகள் கொண்டது மத்திய அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்கிற பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனம். இந்நிறுவனத்தில் சென்னையில் மட்டும் 6 ஆயிரம் பேரும், தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் பேரும் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் முதன்மை அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அடங்குவர்.
இந்தநிலையில், நஷ்டத்திலும் நெருக்கடியிலும் இயங்கி வரும் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு கடந்த செப்டம்பர் மாத சம்பளத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. தலைமை அதிகாரி முதல் கடைநிலை ஊழியர்கள் வரை யாருக்குமே இதுவரை சம்பளம் கிடைக்கவில்லை. சென்னையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 23 கோடி ரூபாய் வரையும், சென்னை அல்லாத பிற மாவட்ட ஊழியர்களுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரையிலும் சம்பளத் தொகை வழங்கவேண்டியுள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இணையான சேவை இல்லாததே நஷ்டத்திற்கு காரணமாக கூறப்பட்டாலும் மத்திய அரசுக்கு சொந்தமான ஒரு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 1ம் தேதி கடந்து சுமார் 20க்கு நாட்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாதது இதுவே முதல்முறை.
மேலும், நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்களும் அந்நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களும் சம்பளத்திற்காக காத்திருக்கின்றனர். இது குறித்து பேட்டியளித்துள்ள பிஎஸ்என்எல் தலைவர் பிரவீன் குமார் புர்வார் "ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சம்பளம் வழங்கப்படும்" என உறுதியளித்துள்ளார்.