பாக் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரர்.. 20 நாட்களுக்குப் பிறகு ஒப்படைப்பு!
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு 26 அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள் (ஏப்.23), பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பணியமர்த்தப்பட்ட 40 வயதான எல்லைப் பாதுகாப்புப் படை வீரரான பூர்ணம் குமார் ஷா தற்செயலாக எல்லையைக் கடந்தார். அவர், சர்வதேச எல்லையை தவறுதலாக தாண்டியதால் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக இரு நாடுகள் இடையே தாக்குதல் நடைபெற்ற நிலையில், இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போனது. இந்த நிலையில், அவர் இன்று, அதாவது கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பிறகு இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் அமிர்தசரஸில் உள்ள கூட்டுச் சோதனைச் சாவடி அட்டாரி வழியாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த ஒப்படைப்பு அமைதியாகவும் நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படியும் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான 3,323 கி.மீ நீளமுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையை பாதுகாக்கும் பணியை பிஎஸ்எஃப் மேற்கொள்கிறது. ரோந்துப் பணியின்போது பிஎஸ்எஃப் வீரர்கள் தவறுதலாக எல்லையைக் கடக்கும் சம்பவங்கள் இயல்பானவை. எனினும், அவர்கள் பேச்சுவார்த்தையின் மூலம் திரும்ப ஒப்படைக்கப்படுவர். அந்த வகையிலேயே அவர் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளியைச் சேர்ந்த பூர்ணம் குமார் ஷா, பிஎஸ்எஃப்பில் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு ரஜனி என்ற மனைவியும், 7 வயது மகனும் உள்ளனர். முன்னதாக, குமார் ஷாவை விடுவிப்பது தொடர்பாக அவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.