“ஹிஜாப் பிரச்னை, ஹலால் பிரச்னை போன்றவை தேவையற்றவை” - கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா

இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதர சகோதரிகள் போல் வாழவேண்டுமென எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Yediyurappa
Yediyurappa@BSYBJP | Twitter

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே 13-ம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு, கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த பல மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தற்போது மீண்டுமொருமுறை பேசுபொருளாகி வருகிறது.

பாஜக
பாஜகfile image

ஹிஜாப் விவகாரம் கடந்து வந்த பாதை...

இவ்விவகாரத்தில், அந்த நேரத்தில் ‘பள்ளிகள் மற்றும் ப்ரீ - பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட சீருடைகளை மட்டுமே அணிந்துசெல்ல வேண்டும். சீருடை பரிந்துரைக்கப்படாத பட்சத்தில் சமத்துவம், ஒருமைப்பாடு, பொது சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமான ஆடைகளை மாணவ மாணவிகள் அணிய வேண்டாம்’ என கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது.

கர்நாடக அரசின் உத்தரவுகளை, கடந்த மார்ச் 15ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனால் இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கை விசாரிக்க இதுவரை அமர்வு எதுவும் அமைக்கப்படவில்லை.

வெளியான கர்நாடக தேர்தல் அறிவிப்பு:

இப்படி ஹிஜாப் விவகாரம் தொடர்ந்து நீடித்து வரும் சூழலில்தான், கர்நாடக தேர்தல் அறிவிப்பும் வெளியானது. இதில் பாஜக தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் உடுப்பி தொகுதி வேட்பாளராக ஹிஜாப் தடைக்கு ஆதரவு குரல் கொடுத்த யஷ்பால் சுவர்ணா பாஜக தலைமையால் (கடந்த செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டார். இவர் ஹிஜாப் தடை உத்தரவுக்கு ஆதரவாக நீதிமன்றம் சென்ற 6 மாணவிகளை தீவிரவாதிகள் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Yediyurappa
Yediyurappafile image

சர்ச்சையும் எடியூரப்பா பேட்டியும்!

இவரை பாஜக முன்னிறுத்தியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து நேற்று இவ்விவகாரம் குறித்து ஆங்கில ஊடகத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேட்டியளித்துள்ளார். அதில் அவர், “நான் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு செல்வதுண்டு. மேலும் பிற சமூக நிகழ்வுகளுக்கும் செல்வேன். தற்போதைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும் செல்வார். ஆனால் இப்போது அவர் அழைப்புகள் விடுக்கப்பட்டும் தேவாலய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அழைப்புகள் விடுக்கப்பட்டால் அவர் செல்லவேண்டும். பிற நிகழ்வுகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

ஹிஜாப் பிரச்னை மற்றும் ஹலால் பிரச்னை போன்றவை தேவையற்றவை. நான் இதுபோன்ற விஷயங்களுக்கு ஆதரவு அளிக்கமாட்டேன். என்னை பொறுத்தவரை இந்துக்களும், முஸ்லிம்களும் சகோதர சகோதரிகள்போல் வாழவேண்டும். நான் ஆரம்பத்திலிருந்தே இந்த நிலைப்பாட்டில்தான் உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com