"ஆங்கிலேயர் கால தேசத்துரோக சட்டப்பிரிவு தேவையா?" - உச்சநீதிமன்றம் கேள்வி

"ஆங்கிலேயர் கால தேசத்துரோக சட்டப்பிரிவு தேவையா?" - உச்சநீதிமன்றம் கேள்வி
"ஆங்கிலேயர் கால தேசத்துரோக சட்டப்பிரிவு தேவையா?" - உச்சநீதிமன்றம் கேள்வி

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்குகள், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் தேவையா என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கும் சட்டப்பிரிவு 124 ஏ -ஐ ரத்து செய்யக்கோரி ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் எஸ்.ஜி. ஒம்பத்கரே உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்தியர்களின் சுதந்திரத்தைப் பறிக்க ஆங்கிலேயே ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்குகளில் மகாத்மா காந்தி, திலகர் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் இன்னும் இந்தச் சட்டத்தை கடைபிடிப்பது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

தேசத்துரோக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் மரக்கட்டையை வெட்டுவதற்காக கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது என்றும், அந்த ரம்பத்தைக் கொண்டு ஒட்டுமொத்த காட்டை அழிப்பதாக இருப்பதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். தகவல் தொழில்நுட்ப தண்டனை பிரிவு 66-ஏ தவறாக பயன்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதால் அந்த சட்டப்பிரிவை ரத்து செய்ததாகவும், அதுபோல தேசத்துரோக வழக்குப்பிரிவும் அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது பாயக்கூடியதாக இருப்பதாக தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், இந்த முழு சட்டப்பிரிவை எக்காரணத்தைக் கொண்டும் நீக்கி விடக்கூடாது என்றும் இதில் இருக்கக்கூடிய தவறுகளை மட்டுமே சரி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகளிடம் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக அனைவரது கருத்துகளையும் கேட்க விரும்புவதாக கூறிய நீதிபதிகள், இவ்விவகாரம் தொடர்பாக, மத்திய அரசு விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com