”ஒரு 'மகாராஜா' உருவாவதை உலகம் விரும்பவில்லை” - ட்ரம்ப்பை சாடிய பிரேசில் அதிபர்
அமெரிக்காவுக்கு எதிரான பிரிக்ஸ் அமைப்பின் கொள்கைகளுடன் ஒத்துச்செல்பவர்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த பிரேசில் அதிபர், அமெரிக்காவின் மிரட்டல் குறித்து யாரும் அஞ்சத் தேவையில்லை என்றார். உலகம் முன்பு போல் இல்லை என்றும் நிறைய மாறிவிட்டது என்றும் கூறிய அதிபர் லுலா டிசில்வா ஒரு பேரரசர் இந்த உலகிற்கு தேவையில்லை என்றார். பிரிக்ஸ் அமைப்பு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க டாலரை சாராமல் வேறு வழிகளில் வர்த்தகம் செய்ய வேண்டிய அவசியம் உலகிற்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக ட்ரம்ப்பின் அறிவிப்பை சீனாவும் கண்டித்திருந்தது. இதற்கிடையே வாஷிங்டனில் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானது என ட்ரம்ப் உறுதிபட நம்புவதாக கூறினார். பிரிக்ஸ் அமைப்பின் நகர்வுகளை அதிபர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கரோலின் லீவிட் தெரிவித்தார்.