இளம் விஞ்ஞானி ‘ட்ரோன் பிரதாப்’ என பரவிய செய்தி : உடைபட்ட உண்மை.!

இளம் விஞ்ஞானி ‘ட்ரோன் பிரதாப்’ என பரவிய செய்தி : உடைபட்ட உண்மை.!
இளம் விஞ்ஞானி ‘ட்ரோன் பிரதாப்’ என பரவிய செய்தி : உடைபட்ட உண்மை.!

கர்நாடகாவின் இளம் விஞ்ஞானி என தகவல் பரவி செய்திகள் வெளியான ட்ரோன் பிரதாப் என்ற இளைஞர் அடிப்படை கேள்விகளுக்கு கூட விடை தெரியாமல் திணறியுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் என்.எம்.பிரதாப். இவர் பறக்கும் ட்ரோன் கேமராக்களின் அருகே நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. அத்துடன் அவர் ட்ரோன்களை கண்டுபிடித்த இளைஞர், இளம் விஞ்ஞானி என்ற செய்திகளும் பரவின. இதுதொடர்பாக ஊடக இணையதளம் ஒன்றில் செய்தியும் வெளியானது. அதில் பிரதாப் தனது 22 வயதிலேயே 600 ட்ரோன் கேமராக்களை கண்டுபிடித்துவிட்டார் என்றும், உலக நாடுகள் அவரது ட்ரோன் கண்டுபிடிப்பு முறையை அறிந்துகொள்ள அழைப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. அத்துடன் அவர் ஐஐடி மும்பையில் வகுப்பெடுத்ததாகவும், இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் அவர் சேருவதற்கு பிரதமர் மோடியே அவரை தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் வெள்ளத்தின்போது பிரதாப் தனது ட்ரோன் கேமராவை பலருக்கும் உணவளிக்க பயன்படுத்தியதாகவும், உறுப்பு அறுவை சிகிச்சையின்போது மனித உறுப்புகளை விரைந்து கொண்டு செல்வதற்கும் அந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பேற்பட்ட ட்ரோன் கேமராவை பிரதாப் எலக்ட்ரானிக் கழிவுகளை கொண்டு தயாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த செய்தி காட்டுத்தீயாக பரவ, சில முன்னணி ஆங்கிலச் செய்தி நிறுவனங்களும் செய்தியை வெளியிட்டிருந்தன. இதனால் பிரதாப் புகழின் உச்சிக்கு சென்று பாராட்டுக்களை பெற்றார். அத்துடன் அவர் ட்ரோன் கேமராக்களுடன் இருக்கும் புகைப்படங்களும் பகிரப்பட்டன.

ஆனால் அதில் ஒரு புகைப்படத்தில் பிரதாப் அருகே இருந்த ட்ரோன் கேமரா ஜப்பானைச் சேர்ந்த ஏசிஎஸ்எல் நிறுவனத்தினுடையது என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்கப்பட்டதில் பிரதாப்பிற்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜப்பானின் ஏசிஎஸ்எல் நிறுவனத்தை சேர்ந்த சடோஷி வாஷியா என்பவர் உறுதி செய்திருந்தார். அத்துடன் அந்த பிரதாப் நிற்கும் புகைப்படத்தில் உள்ள ட்ரோன் கேமரா முழுக்கமுழுக்க தங்கள் நிறுவனத்தால் செய்யப்பட்டது எனவும், அதற்கு பிரதாப் எந்த வகையிலும் உதவில்லை எனவும், அவர் யாரென்றே தெரியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ‘பிடிவி’ என்ற சேனலுக்கு பிரதாப் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அப்போது பிரதாப் ட்ரோன் கண்டுபிடிப்புகளை காண்பிக்குமாறு நெறியாளர் கேட்க அவர் தனது செல்போனில் இருந்த புகைப்படத்தை காண்பித்தார். பின்னர் நெறியாளர் ட்ரோன் கேமரா எப்படி பறக்கிறது, அதற்கான விதி என்ன ? அதை பறக்கும்போது எப்படி கட்டுப்படுத்துவது ? என்ற அடிப்படை கேள்வியை முன்வதைத்தார். ஆனால் அதற்கு பதிலளிக்காத பிரதாப், அதுகுறித்தெல்லாம் தற்போது கூறமுடியாது என நழுவினார். இதையடுத்து பிரதாப்பை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com