பப்ஜி கேமில் ரூ.16 லட்சத்தை செலவழித்த சிறுவன்: மெக்கானிக் கடையில் சேர்த்த தந்தை..!
பப்ஜி விளையாட்டில் 17 வயது சிறுவன் பெற்றோரின் சேமிப்பான ரூ.16 லட்சத்தை செலவழித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது சிறுவன் பப்ஜி கேம்-ஐ விளையாடி வந்துள்ளார். அதற்கான தனது அம்மாவின் ஸ்மார்ட்போனை அவர் பயன்படுத்தியுள்ளார். சிறுவன் மொபையில் அதிகம் நேரம் செலவிடுவதைக் கண்டு பெற்றோர் கேட்கும் போது, ஆன்லைனில் படிப்பதாக அவர் பொய் கூறியுள்ளார்.
இந்நிலையில், பப்ஜி கேமில் அடுத்தடுத்த கட்டங்களை எட்டவும், புதிய அப்கிரேடுகளை செய்யவும் அவர் தனது பெற்றோரின் மூன்று வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியுள்ளார். இவ்வாறாக, ரூ.16 லட்சத்தை அந்தச் சிறுவன் செலவழித்துள்ளார். வங்கியில் இருந்து வந்த மெசெஜ்களை பெற்றோருக்கு தெரியாமல் உடனே அந்த சிறுவன் அழித்துள்ளார்.
இந்த பணம் சிறுவனின் எதிர்காலம் மற்றும் மருத்துவ அவசரத்திற்காக பெற்றோர் சேமித்து வைத்திருந்துள்ளனர்.
இந்த விவகாரத்தை அறிந்த சிறுவனின் தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார். அரசு அலுவலரான அவர் உடனே போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், பணத்தை மீட்க இயலாது என போலீசார் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, தந்தை கோபத்தில் சிறுவனை இருசக்கர வாகனங்கள் சீர் செய்யும் மெக்கானிக் கடையில் வேலைக்கு சேர்த்துள்ளார்.