‘மகனை இழந்துவிட்டோம்.. ‘பப்ஜி’ கேமை தடை செய்யுங்கள்’ - தந்தை கோரிக்கை

‘மகனை இழந்துவிட்டோம்.. ‘பப்ஜி’ கேமை தடை செய்யுங்கள்’ - தந்தை கோரிக்கை

‘மகனை இழந்துவிட்டோம்.. ‘பப்ஜி’ கேமை தடை செய்யுங்கள்’ - தந்தை கோரிக்கை
Published on

ஆன்லைன் கேம் விளையாட வேண்டாமென தாய் திட்டியதால் 16வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகள் பலவும் இன்று இளைஞர்களை கட்டிப்போட்டுவிடுகிறது. வேறெந்த விஷயத்திலும் கவனத்தை செலுத்தவிடாமல் அவர்களை முடக்கிவிடுகிறது. சில நேரங்களில் இளைஞர்களின் இந்தப் பழக்கத்தை பயன்படுத்தி ஆபத்தான விளையாட்டுகள் அவ்வவ்போது முளைக்கின்றன. அதில் புளூவேல் போன்ற விளையாட்டுகள் பல இளைஞர்களின் உயிரையும் பறித்துவிட்டது. பின்னர் அதற்கு தடைவிதிக்கப்பட்டது.

இந்த ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவர்களின் கவனம் சிதறுவதாக பெற்றோர்களும் கவலைப்படுகின்றனர். மாணவர்களின் கைகளில் செல்போன் இருப்பதால் அவர்கள் ஆன்லைன் கேம் விளையாடுவதை யாராலும் தடுக்க முடிவதில்லை. அந்தவகையில், பப்ஜி கேம் தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது. இளைஞர்கள் பலர் இந்த கேமுக்கு பழக்கப்பட்டுவிட்டார்கள். அப்படி, பப்ஜி கேம் விளையாடிய தன்னுடைய மகனை தாய் திட்டியது விபரீதத்தில் முடிந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் மல்கஜ்கிரி பகுதியைச் சேர்ந்த மாணவன் கல்லகுரி சாம்ப சிவா. இந்த மாணவன் 10ம் வகுப்பு தேர்வு எழுதி வந்துள்ளான். ஆங்கில தேர்வுக்கு முன்பாக படிக்காமல் பப்ஜி எனும் கேம் விளையாடிக் கொண்டிருந்தான். கேம் விளையாடுவதை விட்டுவிட்டு பரிட்சைக்கு படிக்குமாறு தாய் திட்டியுள்ளார். 

இதனையடுத்து, சாம்ப சிவா தன்னுடைய அறையில் இருந்த சீலிங் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மகன் தற்கொலை செய்து உயிரிழந்தது பெற்றோர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏப்ரல் 2ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய மகனின் மரணத்திற்கு காரணமாக இருந்த பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று தந்தை பரத் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார். அதேபோல், சமூக ஆர்வலர்கள் பலரும் பப்ஜி கேமை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் மட்டும் இந்த கேம் தடை செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த ஜனவரி மாதம் பப்ஜி கேமிற்கு எதிராக ஒரு இயக்கமே ஆரம்பிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் வேலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இந்த கேம் தடை செய்யப்பட்டது. மாணவர்கள் படிப்பு பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக கூறி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. 

கடந்த மாதம் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர்கள் இருவர் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தனர். ரயில் வருவதையும் கவனிக்காமல் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். ரயில் அவர்கள் மீது மோதியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com