பாஜக எம்.பி இல்லத்தில் வெடிகுண்டு தாக்குதல்: மேற்கு வங்கத்தில் தொடரும் அரசியல் வன்முறை

பாஜக எம்.பி இல்லத்தில் வெடிகுண்டு தாக்குதல்: மேற்கு வங்கத்தில் தொடரும் அரசியல் வன்முறை
பாஜக எம்.பி இல்லத்தில் வெடிகுண்டு தாக்குதல்: மேற்கு வங்கத்தில் தொடரும் அரசியல் வன்முறை

மேற்கு வங்கத்தின் 'வடக்கு 24 பர்கானாஸ்' பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி மக்களவை உறுப்பினர் அர்ஜுன் சிங் இல்லத்தில் புதன்கிழமை காலை வெடிகுண்டு தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் இல்லத்திலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை சமயத்திலிருந்தே மேற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை தொடர்கின்றது. 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான் இந்தத் தாக்குதல் நடத்தியதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மூன்று நாட்டு வெடிகுண்டுகள் காலை 6 மணி அளவில் வீசப்பட்டதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் நுழைவாயில் சேதம் அடைந்ததாகவும், சிலர் காயம் அடைந்ததாகவும் அர்ஜுன் சிங் தெரிவித்துள்ளார். சி.ஆர்.பி.எப். பாதுகாப்பையும் மீறி தாக்குதல் நடந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தாக்குதல் குறித்து மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் கவலை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கட்டற்ற வன்முறை தொடர்கிறது என தனது ட்வீட்டில் குற்றம்சாட்டி, முதல்வர் மம்தா பானர்ஜியின் கவனத்தை ஈர்த்துள்ளார். தேர்தல் சமயத்திலிருந்தே அரசியல் வன்முறை குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளுநர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே ஏற்கெனெவே ஆளுநர் தங்கருக்கு அரசியல் வன்முறை அச்சுறுத்தல் குறித்து தான் தெரிவித்ததாக அர்ஜுன் சிங் தெரிவித்துள்ளார். இருந்தும் வன்முறையை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் விமர்சித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநில தலைவர் திலிப் கோஷும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சிதான் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பவானிப்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வன்முறை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி பவானிப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஜங்கிப்பூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் இந்த மாதம் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அரசியல் வன்முறை குறித்து சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

மேற்கு வங்க அரசே வமுறையை கட்டவிழ்த்துவிட்டு, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அரசியல் போட்டியாளர்களை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவர்களோ, வன்முறைக்கு பாரதிய ஜனதா கட்சிதான் பொறுப்பு என பதில் குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு, இறுதியாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com