`Freshers, தினமும் 18 மணி நேரம் வேலைசெய்ங்க.. வேலைசெய்ய அழாதீங்க!’-சர்ச்சையான CEO கருத்து!
மும்பையை சேர்ந்த சிஇஓ சாந்தனு என்பவர், புதிதாக பணியில் சேரும் இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் உழைக்க வேண்டும் என்றும், `வேலை செய்ய அழுவாதீர்கள்’ என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையான நிலையில், அதற்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் தனது கருத்துக்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
மும்பைவின் ஷேவிங் கம்பெனி சிஇஓ-வான சாந்தனு தேஷ்பாண்டே, சமீபத்தில் பதிவொன்றில் `ஃப்ரெஷர்ஸ், தினமும் 18 மணி நேரம் பணியாற்றி பழக வேண்டும். வேலை செய்ய அழுது நாடகமிடக்கூடாது’ என்று அறிவுரை கூறியிருந்தார். தனது அப்பதிவில் அவர், `22 வயதில் புதிதாக வேலைக்கு செல்லும் ஒருவர், நன்று சாப்பிடுங்கள் - ஃபிட்டாக இருங்கள். அதேபோல அடுத்த 4 - 5 வருடங்களுக்கு, 18 மணி நேரம் வேலை பாருங்கள். இன்றுள்ள பல இளைஞர்கள், எதை எதையே சம்பந்தமில்லாமல் பார்த்துவிட்டு, படித்துவிட்டு வந்து, `Work Life Balance, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது’தான் முக்கியம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் முக்கியம்தான்... ஆனால் இவ்வளவு சின்ன வயதில்ல.
இந்த காலகட்டத்தில், வேலையை ஆராதியுங்கள். அது என்ன வேலையாக இருந்தாலும், முதல் 5 வருடங்கள் நீங்கள் கட்டமைத்துக்கொள்வதுதான் அடுத்து உங்கள் கேரியரையே தீர்மானிக்கும். ஆகவே அதற்கெலாம் கண்டதை கூறி அழுது புலம்பாதீர்கள். கடந்துசெல்லுங்கள் அனைத்தையும்! உங்களால் மிகச்சிறப்பாக செயலாற்ற முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த விளக்கத்தில், அவர் குறிப்பிட்டிருப்பவை:
“எனது பதிவால் புண்பட்டவர்களுக்கு - எனது மன்னிப்பை முன்வைக்கிறேன். நான் சொல்ல வந்த சில கருத்தில், இன்னும் நுணுக்கமும் நேர்த்தியும் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
என்னுடைய நிலை அறிந்து, என்மீது அக்கறை கொண்டு பேசிய அனைவருக்கும், ஆத்மார்த்தமான என் நன்றிகள்.
என் பெற்றோருக்கு, `உங்கள் மகன், அடிமைகளின் முதலாளி’ என்று மெசேஜ் அணுப்பிய ஆயிரம் ஆயிரம் பேருக்கு நான் சொல்ல நினைப்பது, நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள்”
என்று குறிப்பிட்டுள்ளார். பின் வெவ்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ள அவர், அதில் ``22 முதல் 27 வயது வரையில் அலுவல் வேலை பார்ப்பவர்களுக்கு, ஏராளமான வாய்ப்புகள் நம் கண் முன் குவிந்து கிடக்கின்றன. ஏராளமான பொறுப்புகள் உள்ளன. இதனை பயன்படுத்திக்கொண்டால், அவர்கள் பல வேலைகளை கற்றுக்கொள்ளவும், வேலையில் திறன் பெறவும், தங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கவும் முடியும். இதை குறிப்பிட்டே அன்று அவ்வாறு பேசினேன்” என்றுள்ளார்.