
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தை தகர்க்கப் போவதாக இ மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மெயிலில் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் மர்ம நபர் ஒருவர் தகவல் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து உடனடியாக உள்ளூர் போலீஸூக்கு அவர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு இருப்பதற்கான தடயங்கள் எதுவும் இல்லாததால் பயணிகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இமெயில் மூலம் தகவல் அனுப்பிய மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.