புத்துயிர் பெறும் போஃபர்ஸ் வழக்கு? அமெரிக்காவுக்கு சிபிஐ கடிதம்! பின்னணி இதுதான்!
1980களின் பிற்பகுதியில் இந்தியாவை அதிர வைத்தது போஃபோர்ஸ் ஊழல் வழக்கு. 1989இல் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியைப் பறிகொடுத்ததற்கு இந்த ஊழல் குற்றச்சாட்டு முக்கியப் பங்கு வகித்தது. 2011இல் மூடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட இந்த வழக்கு இப்போது புத்துயிர் பெறப்போவதாகக் கருதப்படுகிறது.
போஃபோர்ஸ் ஊழல் தொடர்பாக தனியார் துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேன் இடம் உள்ள முக்கிய தகவல்களை வழங்கக் கோரி அமெரிக்க அரசுக்கு இந்தியாவின் சிபிஐ, கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
1986இல் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது ஸ்வீடனைச் சேர்ந்த AB Bofors என்ற நிறுவனத்திடம் ஆயிரத்து 433 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டது. இதற்காக இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு போஃபோர்ஸ் நிறுவனம் ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஸ்வீடன் வானொலி நிறுவனம் 1987இல் செய்தி வெளியிட்டது.
1989 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததில், போஃபோர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு முக்கியப் பங்கு வகித்தது. 1990இல் போஃபோர்ஸ் வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. 1991இல் வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி உயிரிழந்தார். போஃபோர்ஸ் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக இத்தாலிய வணிகர் ஒட்டாவியா குவாட்ரோச்சி மீது 2000ஆம் ஆண்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2004இல் அப்போது உயிரிழந்துவிட்ட ராஜிவ் காந்தி உள்பட குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 2011இல் குவாட்ரோச்சியும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து போஃபோர்ஸ் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், போஃபோர்ஸ் லஞ்சப் பணம் செலுத்தப்பட்டிருந்த ஸ்விஸ் வங்கிக் கணக்கை, தான் கண்டறிந்தபோது ராஜீவ் காந்தி மிகவுன் ஆத்திரம் அடைந்ததாக துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேன் 2017இல் கூறினார். இதன் அடிப்படையில் அமெரிக்காவுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப உள்ளதாக கடந்த அக்டோபரில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்திருந்தது. சிபிஐயின் இந்த நடவடிக்கையின் மூலம் போஃபோர்ஸ் வழக்கு புத்துயிர் பெறும் என்று கருதப்படுகிறது.
போஃபோர்ஸ் வழக்கு கடந்து வந்த பாதை
1986 - ஸ்வீடனின் AB Bofors நிறுவனத்திடம் ரூ.1433 கோடி மதிப்பில் ஆயுதம் வாங்க இந்திய அரசு ஒப்பந்தம்
1987- போஃபோர்ஸ் ரூ.64 கோடி லஞ்சம் கொடுத்ததாக ஸ்வீடன் வானொலி நிறுவனம் குற்றச்சாட்டு
1990- போஃபோர்ஸ் வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு
1991 - வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி மரணம்
2000 - இடைத்தரகராக செயல்பட்டதாக இத்தாலிய வணிகர் ஒட்டாவியா குவாட்ரோச்சி மீது வழக்கு
2004- ராஜீவ் காந்தி உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்தது
2011- குவாட்ரோச்சி விடுவிக்கப்பட்டார்; வழக்கு முடிந்துவிட்டதாக கருதப்பட்டது.
2017 - போஃபோர்ஸ் ஊழல் பணம் ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டதாக அமெரிக்க தனியார் துப்பறிவாளர் தகவல்
2025 - போஃபோர்ஸ் வழக்கு தொடர்பான முக்கிய தகவல்கள் கோரி அமெரிக்க அரசுக்கு சிபிஐ கடிதம்