குஜராத்: இறப்பிலும் 5 பேருக்கு வாழ்வுகொடுத்த இரண்டரை வயது குழந்தை

குஜராத்: இறப்பிலும் 5 பேருக்கு வாழ்வுகொடுத்த இரண்டரை வயது குழந்தை

குஜராத்: இறப்பிலும் 5 பேருக்கு வாழ்வுகொடுத்த இரண்டரை வயது குழந்தை
Published on

குஜராத் மாநிலத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட குழந்தையின் உடல் உறுப்புகளை 5 பேருக்கு பெற்றோர் தானம் செய்தனர்.

குஜராத் மாநிலம் பதார் பகுதியில் உள்ள சாந்தி அரண்மனைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சஞ்சீவ் ஓசா மற்றும் அர்ச்சனா தம்பதியர். இவர்களுக்கு 6 வயதில் கியாரா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர்களின் இரண்டரை வயது மகன் ஜாஷ் ஓசா டிசம்பர் 9ஆம் தேதி பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது 2வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டான்.

அவனை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்தபோது, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதையும், மூளையில் வீக்கம் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்திருக்கின்றனர். ஆனால் டிசம்பர் 14-ஆம் தேதி குழந்தைக்கு மூளைச் சாவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் பெற்றோர்கள் மனமுடைந்தாலும் மருத்துவர்கள் உறுப்பு தானம் செய்யும்படி ஆலோசனைக் கூறினர்.

முதல்நாளில் குழந்தை தன்னை அம்மா என்று அழைத்ததாகக்கூறி முதலில் உறுப்புகளை தானம் செய்வதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறார் அர்ச்சனா. ஆனால் சஞ்சீவ் பத்திரிகையாளர் என்பதால் மனைவியை சமாதானம் செய்து தனது குழந்தையின் உடலை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி, சஞ்சீவும் அர்ச்சனாவும் Donate Life அமைப்பின் நிறுவனர் நிலேஷ் மண்டேல்வாலாவைத் தொடர்புகொண்டு ஜாஷின் இதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் போன்ற அனைத்து உறுப்புகளையும் தானம் செய்வது குறித்து கூறியிருக்கின்றனர்.

மண்டேல்வாலா மாநில உறுப்பு மற்றும் திசு மாற்ற அமைப்பின் ஆளுநர், டாக்டர். பிரஞ்சால் மோடியை தொடர்புகொண்டு உடல் உறுப்புகளை மற்ற மாநிலங்களுக்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்திருக்கிறார். அதன்படி, இதயம் மற்றும் நுரையீரலை சென்னையில் எம்.ஜி.எம் மருத்துவமனை நோயாளிகளுக்குப் பொருத்தியிருக்கின்றனர். இதயத்தை ரஷ்யாவைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கும், நுரையீரலை உக்ரைனை சேர்ந்த மற்றொரு 4 வயது சிறுமிக்கும் பொருத்தினர்.

சிறுநீரங்களை சாலை போக்குவரத்து வழியாக 265 கி.மீ தொலைவிலுள்ள சிறுநீரக ஆராய்ச்சி சென்டருக்கு 180 நிமிடங்களில் கொண்டு சேர்த்தனர். ஒரு சிறுநீரகத்தை 13 வயது சிறுமிக்கும், மற்றொன்றை 17 வயது சிறுமிக்கும் பொருத்தினர். சிறுவனின் கல்லீரலை பாவ் நகரில் உள்ள 2 வயது சிறுமிக்கு பொருத்தினர். இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம், தன்னுடைய குழந்தை பல பேருக்கு புதுவாழ்வு கொடுத்துள்ளான் என்று சஞ்சீவ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com