கர்நாடகா | பெண் கொடூர கொ*.. சாலையில் வீசப்பட்ட உடல் பாகங்கள்! தலை கிடைக்கவில்லை!
கர்நாடகா துமகூரு மாவட்டம், கொரட்டகரே தாலுகாவின், சிம்புகானஹள்ளி கிராமத்தில், விவசாயி ஒருவர் வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பிளாஸ்டிக் கவரில் மனிதனின் கை வீசப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயி, போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அங்கு வந்த கொரட்டகரே போலீசார், கறுப்பு நிற கவரில் இருந்த கையை கைப்பற்றினர். சுற்றுப்பகுதிகளில் சோதனை நடத்தினர். அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் மற்றொரு கை, வயிற்று பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கறுப்பு மற்றும் மஞ்சள் நிற கவர்களில் போட்டு, சாலையில் வீசப்பட்டிருந்தன. தலை மற்றும் கால் கிடைக்கவில்லை.
பெண் உடல் என சந்தேகிக்கும் காவல்துறை..
முதற்கட்ட ஆய்வில், கையில் உள்ள டாட்டூவை பார்த்தால், அது பெண்ணின் உடலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கோளாலா மற்றும் கொரட்டகரே போலீஸ் நிலைய எல்லைகளில், நான்கு இடங்களில் கிடைத்த உடல் பாகங்களை தடவியல் ஆய்வகத்துக்கு அனுப்ப, போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால், கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. துமகூரு எஸ்.பி., அசோக் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
சுற்றுப்பகுதிகளில் யாராவது காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை போலீசார் சேகரிக்கின்றனர். எங்கோ கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி சாலைகளில் வீசியுள்ளனர். இதை செய்தவர்களை கண்டுபிடிக்க, போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்