சைக்கிளில் சென்ற சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுப்பு: விசாரணை தீவிரம்!
ஹைதராபாத் நகரில் மாலை நேரத்தில் வீட்டில் இருந்து சைக்கிளில் சென்ற 12 வயது சிறுமி ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது ஒரு துன்பியல் சம்பவமாக பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேடுதல் பணிகள் தொடங்கிய சில மணி நேரங்களில் சிறுமியின் உடல், அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் கண்டெடுக்கப்பட்டது.
இங்குள்ள காக்கட்டியா நகரைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் பெயர் சுமிதா கபூரியா. தன் வீட்டில் இருந்து சைக்கிளில் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிக்குச் சென்றிருக்கிறார். ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சிறுமி சுமிதா, வியாழக்கிழமையன்று சைக்கிளில் புறப்பட்ட சில நிமிடங்களில் காணாமல்போனார். பெற்றோரின் புகாரைத் தொடர்ந்து நெரட்மெட் பகுதி போலீசார் உடனடியாக முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.
ஏரிக்கு அருகிலுள்ள வடிகால் பகுதியில் சைக்கிளில் சென்று சிறுமி விழுந்திருக்கலாம் என நம்பப்பட்டாலும், அதை பெற்றோர் நம்பவில்லை. அவள் மிகவும் கவனமானவள் என்றும் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம் என்றும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். நான்கு தனிக் குழுக்கள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கோப்புப் படம்
சிறுமியின் உடல் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இருந்து 2 கி. மீ. தூரத்தில் அவரது சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகளின் உடல் ஏரியில் காணப்பட்டதில் இருந்து அவரது பெற்றோர் தேற்றமுடியாத சோகத்தில் உறைந்துள்ளனர். சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் காவல்துறையினர் சிறுமியின் உயிரிழப்புக்கான காரணத்தைத் தேடிவருகின்றனர்.