ப்ளூவேல் அபாயம்... மரணத்தின் விளிம்பில் மீட்கப்பட்ட சிறுவன்
ப்ளூவேல் விளையாட்டின் விபரீதத்தால் வீட்டை விட்டு காணாமல் போன 17 வயது சிறுவனை இறுதி கட்ட விளையாட்டை ஆரம்பிக்கும்போது காவல்துறையினர் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
ஜெய்ப்பூர் கனக்புரத்தை 17 வயது சிறுவன் ப்ளூவேல் விளையாட்டின் அபாயகட்டத்தை நெருங்கும்போது மும்பையில் இருந்த அவனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஜெய்பூர் ஜோத்வாரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன் கடந்த 21ம் தேதி காணமால் போனான். இதனைத் தொடர்ந்து அவனது குடும்பத்தினர் ஜெய்பூர், கர்னிவிகார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக மாணவனின் பள்ளி நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில்’ஆரம்பத்தில் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டினோம். பிறகு ப்ளூவேல் விளையாட்டு பற்றி அறிந்து அந்த விளையாட்டின் சவாலை ஏற்க உறுதி செய்தோம்" எனத் தெரிவித்தனர். காணாமல் போன மாணவன், ப்ளூவேல் விளையாட்டில் உள்ள மொத்தமுள்ள ஏழு சவால்களில், ஆறாவது சவாலை முடித்து விட்டதாகவும் அந்த மாணவர்கள் கூறினர்.
ப்ளூவேல் விளையாட்டில் இறுதியான சவால் தற்கொலை செய்து கொள்வது. இதன் அபாயத்தை உணர்ந்த காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து சைபர் க்ரைம் உதவியுடன் மாணவன் வைத்திருந்த செல்போன் எண்ணைக் கொண்டு உடனடியாக அவன் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கும் வழிகளில் இறங்கினர். அதன்படி அந்தச் சிறுவன் செல்போனில் பேசிய விவரங்களைச் சேகரித்தனர். அந்தச் சிறுவன் இரு செல்போன்களை பயன்படுத்தி பயணித்து வருதுவதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மும்பை சர்ஜ் கேட் பகுதியில் அவனை கண்டுபிடித்தனர்.
ஏற்கெனவே ப்ளூவேல் விளையாட்டில் ஆறு சவால்களை முடித்திருந்த அந்த மாணவன் ஏழாவது சவாலான தற்கொலை சவாலை விளையாடும் முன் காவல்துறையினர் அவனைக் கண்டுபிடித்து காப்பாற்றியுள்ளனர். தற்போது அந்த மாணவனுக்கு மன ரீதியிலான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.