ப்ளூ வேல் இணைய விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல உயிர்களை கொள்ளை கொண்ட, ‘ப்ளூ வேல்’ எனப்படும் ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் இப்போது பரவலாகி வருகிறது. இங்கும் சில மாணவர்கள் இந்த விளையாட்டால் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்த விளையாட்டின் இணைப்புகளை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஆஷிக் (20) என்ற கல்லூரி மாணவர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்துள்ளார். பாலக்காட்டை சேர்ந்த இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ஆய்வு செய்தபோது, அவரது கையில் திமிங்கலத்தின் உருவம் வரையப்பட்டு இருந்தது. மேலும் அவரது செல்போனை எடுத்து பார்த்த போது, அதில் அவர் கைகளில் ரத்தக்காயம் ஏற்படுத்தியது, கடலில் நின்று செல்பி எடுப்பது, வீட்டின் மாடியில் இருந்து குதிப்பது, கல்குவாரி மேல் நிற்பது போன்ற படங்கள் இருந்தன.
இவை அனைத்தும் ‘ப்ளூ வேல்’ விளையாட்டின் சவால்கள் என்பதால், ஆஷிக்கும் அந்த விளையாட்டில் ஈடுபட்டு, இறுதியில் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.
இந்த விளையாட்டு காரணமாக கேரளாவில் மட்டும் 3 பேர் தற்கொலை செய்துள்ளனர். திருவனந்தபுரத்தை சேர்ந்த மனோஜ் (19), கண்ணனூரை சேர்ந்த சவாந்த் (19) ஆகிய கல்லூரி மாணவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.