ப்ளூவேல் தடை விவகாரம்: 3 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
ப்ளூவேல் விளையாட்டைத் தடை செய்வது தொடர்பாக மத்திய அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உலகம் முழுவதும் ப்ளூவேல் விளையாட்டுக்கு நூற்றுக்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் இந்தியாவையும் ப்ளுவேல் தாக்கம் விட்டுவைக்கவில்லை. தமிழகத்திலும் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் ப்ளூவேல் விளையாட்டிற்கு பலியானார். இதனையடுத்து, ப்ளூவேல் விளையாட்டைத் தடை செய்யக்கோரி மதுரையை சேர்ந்த பொன்னையா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ப்ளூவேல் விளையாட்டு சிறு பிள்ளைகளின் உயிரை பலி வாங்கி வருவதால் இதை தடை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, ப்ளூவேல் விளையாட்டைத் தடை செய்வது தொடர்பாக மத்திய அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.