டாக்டர் முன்னிலையில் ஐசியூ-வில் சூனியம் எடுத்த மந்திரவாதி கைது!

டாக்டர் முன்னிலையில் ஐசியூ-வில் சூனியம் எடுத்த மந்திரவாதி கைது!

டாக்டர் முன்னிலையில் ஐசியூ-வில் சூனியம் எடுத்த மந்திரவாதி கைது!
Published on

ஐசியூ-வில் சிகிச்சை பெற்றுவந்த கேன்சர் நோயாளிக்கு சூனியம் எடுத்த மந்திரவாதி கைது செய்யப்பட்டார். சூனியம் எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் உள்ள தட்டாவாடியைச் சேர்ந்தவர் சந்தியா சோனாவானே
(Sandhya Sonawane). வயது 24. இவருக்கு மார்பக புற்றுநோய். இதற்காக வீட்டின்
அருகில் இருந்த சாவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் நோய் குறையவில்லை. அதிகரிக்கத் தொடங்கியதால் இன்னொரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார் டாக்டர் சாவன். முதல் ஆபரேஷன் காரணமாக அவருக்கு உடல் நிலை அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அவருக்கு அதிக ரத்தப் போக்கும் ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் சாவன், சற்று பெரிய மருத்துவமனையான தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கச் சொன்னார். அவர் ஆலோசனைபடி அங்கு சென்று சிகிச்சை பெற்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நோய் குணமாகவில்லை. இதுபற்றி டாக்டர் சாவனிடம் உறவினர்கள் முறையிட்டனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 21-ம் தேதி, ஒரு மந்திரவாதியுடன் மருத்துவமனைக்கு வந்தார் டாக்டர் சாவன். ஐசியூ அறையில் இருந்த சந்தியாவைப் பார்த்தார். பிறகு அவர் உறவினர்களிடம், ’கடைசி கட்ட சிகிச்சை’யை இவர் நடத்த இருக்கிறார் என்று கூறினார். இதையடுத்து அந்த மந்திரவாதி, பூஜை செய்ய ஆரம்பித்தார். சூனியம் எடுப்பதாகக் கூறி, மந்திர, தந்திர வேலைகளை செய்தார். இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார் டாக்டர் சாவன். இதை எதிர்பார்க்காத சந்தியாவின் சகோதரர் மகேஷ், நடந்ததை வீடியோ எடுத்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தியா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து அந்த வீடியோவுடன் போலீசில் புகார் அளித்தார் மகேஷ். மந்திரவாதியை கைது செய்தது போலீஸ். டாக்டர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுபற்றி, தீனாநாத் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தியில், ‘எங்கள் மருத்துவமனையில் இது போன்ற சம்பவம் நடக்கவில்லை. ஐசியூவில் நோயாளியை தவிர வேறு யாரையும் அனுமதிப்பதில்லை. பிப்ரவரி 21-ம் தேதி சந்தியா இங்கு அனுமதிக்கப்பட்டார். உடலில் பல பகுதிகள் செயலிழந்ததால் அவர் இறந்தார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் முன்னிலையில் நோயாளிக்கு நடந்த மந்திர தந்திர பூஜை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com