5 நாட்களில் 3-வது தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் பாஜக நிர்வாகி மீது துப்பாக்கிச்சூடு
ஜம்மு காஷ்மீரில் பாஜக மாவட்ட தலைவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 6ம் தேதி பாஜகவைச் சேர்ந்த அகமது காண்டே என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதம் பந்திபோராவின் பாஜக முன்னாள் தலைவர் வாசிம் பாரி மற்றும் அவரது தந்தை, சகோதரர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேருமே உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று காலை பாஜக மாவட்ட தலைவர் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள மொகிந்த்போரா பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. புத்காம் மாவட்ட பாஜக ஓபிசி பிரிவு தலைவராக இருந்த அப்துல் ஹமீத் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர் அல்லது நிர்வாகிகள்மீது ஜம்மு காஷ்மீரின் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் இது 3வது தாக்குதல் எனக்கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பிறகு சில பாஜக உறுப்பினர்கள் அந்த கட்சியிலிருந்து விலகியுள்ளனர். இது குறித்து தெரிவித்துள்ள பாஜக நிர்வாகி ஒருவர், நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தோம். ஆனால் எந்த பிரச்னையும் இல்லாமல் குடும்பத்துடன் வாழவே விரும்புகிறோம். அதனால் பாஜகவில் இருந்து விலகுகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் சில நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்