பாஜகவின் கொரோனா தடுப்பூசி வாக்குறுதி விதிமீறலா?: விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்
பாஜகவின் கொரோனா இலவச தடுப்பூசி வாக்குறுதி, தேர்தல் விதிமீறல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகார் தேர்தலில் வெற்றிபெற்றால் மாநில மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. பாஜகவின் இந்த தேர்தல் அறிக்கைக்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கொரோனா தடுப்பூசியை தேர்தலில் வாக்கு சேகரிக்கும் கருவியாக பாஜக பயன்படுத்துவதாக கண்டனங்களும் எழுந்தது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன், அது இந்தியர்கள் அனைவருக்கும் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் மோடியும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி குறித்து பாஜகவின் தேர்தல் அறிக்கையும் பிரசாரமும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக கோக்கலே என்பவர் ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அதில் "மாநிலங்களின் தேர்தல் அறிக்கையில் அரசியல் சாசன சட்டத்தை மீறி எதுவும் இடம்பெறக் கூடாது. அப்படி எந்தவொரு தேர்தல் விதிமீறலும் இவ்விவகாரத்தில் இல்லை" என தெரிவித்துள்ளது.