கூட்டணியால் கோபமடைந்த எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக திட்டம்
கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியால் கோபமடைந்த அக்கட்சி எம்எல்ஏ-க்களை இழுக்க பாஜக திட்டம் போட்டு வருதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்தல் முடிவுகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி(113 தொகுதிகள்) எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனிடையே தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே அவசரம் அவசரமாக காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்தது. பாஜக ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல் அமைச்சர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு விட்டுக் கொடுக்க காங்கிரஸ் முன்வந்தது.
ஆனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனக்கூறி, பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து பேசினார். இதேபோன்று, காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஆளுநரை சந்தித்துள்ளன. ஆளுநர் யாரை ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியால் கோபமடைந்த எம்எல்ஏ-க்களை இழுக்க பாஜக திட்டம் போட்டு வருதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள பாஜகவின் ஈஸ்வரப்பா, காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதை விரும்பாத அக்கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாஜக தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்.