டிஐஜி ரூபா பணியிடமாற்றம் - டெல்லியில் பாஜக போராட்டம்
கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் ரூபாவுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ரூபாவை கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மீண்டும் சிறைத்துறை டிஐஜியாக நியமிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ரூபாவை இடமாற்றம் செய்திருப்பது தவறான முன்னுதாரணமாகும். சிறையில் நடந்த விஷயங்களை பேசாமலும், அதிகாரிகளுக்கு கடிதம் எழுதாமலும், ஊழல் நடைபெறுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமலும் இருக்க வேண்டும் என்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த டிஐஜி ரூபா, அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளதால், இவ்விவகாரத்தில் எந்த கருத்தும் கூற இயலாது எனத் தெரிவித்துள்ளார். தனக்கு ஆதரவு தெரிவித்த கிரண்பேடிக்கும் ரூபா நன்றி தெரிவித்துக்கொண்டார்.